பதிவு செய்த நாள்
10
மார்
2020
01:03
உடுமலை: உடுமலை, பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாய் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை, சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா, பிப்., மாதம் துவங்கியது. கடந்த 3ம்தேதி, காப்பு கட்டப்பட்டு, பக்தர்கள் முளைப்பாலிகை இடுவதுடன் திருவிழா களைகட்டியது. அன்று, மாலையில் கும்பம் அலங்கரிக்கப்பட்டு, கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
நேற்றுமுன்தினம் மாலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 10:00 மணிக்கு அம்பாள் திருக்கல்யாண சடங்குகள் துவங்கின.பெண்கள், திருக்கல்யாண சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. அம்மனுக்கும், சுவாமிக்கும் பால், தயிர் அபிஷேகங்கள் நடந்தன. யாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலசத்திலிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மதியம், 12:50 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கோஷத்தோடு, அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.