பதிவு செய்த நாள்
10
மார்
2020
02:03
சென்னை: மாற்று திறனாளிகள், கோவில்களுக்கு வந்து வழிபாடு மேற்கொள்ள வசதியாக, உரிய வசதிகள் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, நந்தனம் பகுதியைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், ௩௮ ஆயிரத்துக்கும் அதிகமாக கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள், பழமை வாய்ந்தவை. இங்கு, சாய்வுதள வசதி இல்லை. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கோவிலுக்குள் வர முடியாத நிலை உள்ளது. சக்கர நாற்காலிகளில் வரும் மாற்று திறனாளிகள், கோவிலுக்குள் வந்து, சாமி கும்பிட முடியாது.
எல்லா கோவில்களிலும், பொது மக்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு, கட்டண வரிசை என, தனித்தனி வரிசைகள் உள்ளன. ஆனால், மாற்று திறனாளிகளுக்கு என்று, தனி வரிசை கிடையாது. இதனால், கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து தான், அவர்கள் உள்ளே செல்ல முடியும். திருப்பதி கோவிலில், மாற்று திறனாளிகளுக்கு என, தினசரி ஒரு முறை, சிறப்பு தரிசன வசதி வழங்கப் பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்று திறனாளிகளுக்கு என, தனி நேரம் ஒதுக்கப்படுகிறது. பல கோவில்களில் புதுப்பிப்பு பணிகள் நடந்தாலும், மாற்று திறனாளிகள் எளிதில் வந்து செல்ல, வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, மாற்று திறனாளிகள், கோவில்களுக்கு எளிதில் வந்து, வழிபாடு செய்ய வசதியாக, உரிய வசதிகளை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரஷே், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்..