பதிவு செய்த நாள்
10
மார்
2020
02:03
புதுச்சேரி : வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று நடைபெற்ற மாசிமக விழா வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு, புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.இதில் செஞ்சி ரங்கநாதர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகர். திண்டிவனம் நல்லியகோடன் நகர் சீனிவாச பெருமாள், சிங்கிரிகுடி நரசிம்மர், புதுச்சேரி மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், அங்காள பரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து சுவாமிகள் வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி., மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரம் அமைத்தும், ட்ரோன் மூலமும் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர்.பக்தர்கள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டதுடன், பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகை யில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.மாசி மகத்திற்கு வந்த பக்தர்களுக்குப் பல்வேறு இடங்களில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாசிமகத்தையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.