பதிவு செய்த நாள்
18
மார்
2020
10:03
ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடக்குமா? என்பது, இன்று முடிவு தெரியும். கொரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முதல் மக்கள் கூடும் இடங்களில் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோட்டின் மிகப் பெரிய விழாவான. பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் நேற்றிரவு நடப்பதாக இருந்தது. விழாவை நடத்துவது தொடர்பாக, அனைத்து துறை, மும்மத பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, 12 நாட்கள் நடக்க உள்ளதை, வேறு தேதிக்கு ஒத்தி வைக்க முடியுமா என, கலெக்டர் கதிரவன் கேள்வி எழுப்பினார். மேலும், அறநிலையத்துறை, கோவில் அரங்காவல் குழு, பக்தர்களிடம் பேசி தெரிவிக்க கேட்டுக் கொண்டார். தவிர, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் அவசர கடிதம் அனுப்பப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று இரவில் கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், மக்களின் நலன் கருதி, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா மறு தேதி குறிப்பிடும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார். இதேபோல், பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா, சர்ச்களில் ஞாயிறு நடக்கும் பிரார்த்தனை கூட்டம், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் தொழுகையை மாற்றி, அவரவர் வீடு, வர்த்தக நிறுவனங்களில் நடத்தி கொள்ள யோசனை கேட்கப்பட்டது. இதற்கான முடிவும் இன்று அறிவிக்கப்படும், என மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் தெரிவித்தனர்.