பதிவு செய்த நாள்
18
மார்
2020
01:03
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில், வைத்தியநாத சுவாமி கோவிலில் கொரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு முருகப்பெருமான், செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இந்த கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை பூஜித்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்று கூறப்படுகிறது. சுவாமி வைத்தியராக அருள் பாவிக்கும் இந்த சிறப்பு மிக்க கோயிலில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி நேற்று மிருத்தியுஞ்சய, வைத்தியநாத அஸ்திர, மூல மந்திர ஜபம் மற்றும் மகாயாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடிமரம் அருகே விநாயகர், சுவாமி, அம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரன், தன்வந்திரி மற்றும் ஜுரஹரேஸ்வரரை வெள்ளி கலசத்தில் ஆவாகனம் செய்து ஜபங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் 2 குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது. அதனை அடுத்து கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு சுவாமி, அம்பாள் உள்ளிட்டோருக்கு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை சங்கரமடத்தின் வித்வான் கணஷே் செய்திருந்தார். சிறப்பு யாகத்தை ராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் சுந்தர நாராயணன், வாஞ்சிநாதன் மற்றும் பாஜக தேசிய குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.