பதிவு செய்த நாள்
18
மார்
2020
02:03
ஈரோடு: பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், ஒரே நாளில் திருவிழா தொடங்கி, ஒரே நாளில் நிறைவு பெறும். பெரிய மாரியம்மன் கோவிலில் தீர்த்தம் ஊற்றுவது, சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கும். விழா நிறைவில் மூன்று கோவில் கம்பங்களும் ஒன்றாக எடுக்கப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். தற்போது காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடக்கிறது. இதனால் நடப்பாண்டு விழா பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில் மட்டும் நடப்பதாக, அறிவிக்கப்பட்டது. நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால், விழா நடத்துவதா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில கலெக்டர் கதிரவன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும், ஆர்.டி.ஓ., முருகன் தலைமையிலும், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், செயல் அலுவலர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் முருகேசன், அ.தி.மு.க., பிரமுகர் மனோகரன், காங்.. விஜயபாஸ்கர், தி.மு.க., மதன், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மனித உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழாவை ஒத்திவைப்பது நல்லது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல், பூச்சாட்டு விழா ரத்து செய்யப்பட்டு, திருவிழாவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே பூச்சாட்டுதல் விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பூக்களை, மூலவருக்கு தூவி தரிசனம் செய்து சென்றனர்.