பதிவு செய்த நாள்
21
மார்
2020
02:03
ஓசூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மாநில எல்லையில் உள்ள கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தற்காலி தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அம்மாநிலத்தில் மக்கள் அதிகமாக கூடும் மால், வணிக வளாகங்கள், தியேட்டர்களை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி உட்பட மொத்தம், 16 இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பின் தான், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அரசு பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தமிழக எல்லையான ஓசூரில் பரவுவதை தடுக்கும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று காலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தினமும் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்து செல்லும் வகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஹிந்து அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், ஓசூர் வெங்கடேஷ் நகர் மலை மீதுள்ள பெருமாள் கோவில் மற்றும் நகரேஸ்வரர், சோமேஸ்வரர், கோதண்டராமர் கோவில்களிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆகம விதிப்படி சுவாமிக்கு மூன்று நேர பூஜை மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.