விருதுநகர்: விருதுநகர் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒத்தியவைத்ததோடு, நாடார்கள் தேவஸ்தானம் ஐந்து கோயில்களிலும் மார்ச் 31 ம்தேதி வரை பக்தர்கள் வழிபாடுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா காப்புகட்டுடன் கடந்த மார்ச் 15ல் துவங்கியது. மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து தேவஸ்தான நிர்வாகம் மார்ச் 29ல் நடக்க வேண்டிய கொடியேற்றத்தை ஏப்ரல் 1 க்கு மாற்றியது. வழக்கம் போல் அந்தந்த தேதிகளில் பொங்கல், அக்னிசட்டி, தேரோட்டம் நடக்கும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று கலெக்டர் கண்ணன் கோயில் வழிபாட்டு தலங்களுக்கு மார்ச் 31 வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகிகள் கூறியதாவது அரசு ஆணையின் படி விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு மறு உத்தரவுக்கு பின் விழா தேதி நிர்ணயம் செய்யப்படும். தேதி நிர்ணயிக்கப்பட்ட பின் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம். இத்தடையானது தேவஸ்தானம் உட்பட்ட 5 கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் கோயில்களில் நித்திய பூஜைகள் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதியில்லை ,என்றனர்.