ஏழை என்பவன் யார் எனக் கேட்டதற்கு ‘‘யாரிடம் திர்ஹமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்த பொருளோ இல்லையோ அவரே ஏழை’’ என்று மக்கள் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த நாயகம், ‘‘மறுமை நாளில் தன் தொழுகை, நோன்புடன் இறைவனின் முன் ஒருவன் ஆஜராவான். அவன் வாழும் காலத்தில் யாரையாவது திட்டியிருப்பான். இட்டுக்கட்டி யார் மீதாவது அவதுாறு சொல்லியிருப்பான். எவருடைய பணத்தைப் பறித்திருக்கலாம். நியாயம் இல்லாமல் யாரையாவது அடித்திருக்கலாம். ஏன் கொலையும் செய்திருக்கலாம். இந்நிலையில் அவனால் அநீதிக்குள்ளானர்களுக்கு அவனது நன்மைகள் பங்கிடப்படும். அவனது நன்மை அனைத்தும் தீர்ந்து போய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் கூட மிஞ்சியிருக்கலாம். அதன்பின் அவர்களின் பாவங்கள் இவனது கணக்கில் எழுதப்படும். அதனால் அவன் நரக லோகத்தில் இருந்து வீசியெறியப்படுவான். இப்படிப்பட்ட பஞ்சப்பராரியே உண்மையான ஏழை’’ என்றார்.