ராமானுஜரின் சீடரான எம்பார் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து, காலட்சேபம் செய்து கொண்டிந்தார். பல பக்தர்கள் தினமும் வந்து கேட்பார்கள். ஒருமுறை, காஞ்சிபுரத்தில் இருந்து வந்த சில பக்தர்கள் காலட்சேபத்தைக் கேட்டு ரசித்தனர். தங்கள் ஊரில் நிரந்தரமாகத் தங்கி காலட்சேபம் நடத்த கேட்டுக்கொண்டனர். எம்பார் மறுத்து விட்டார். அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் திரும்பத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்து அவரைக் காஞ்சிபுரம் வரும்படி வற்புறுத்தியபடியே இருந்தார். பல ஆண்டுகளாக மறுத்துவிட்ட எம்பாருக்கு திடீரென காஞ்சிபுரம் போகும் எண்ணம் தோன்றியது. கிளம்பி விட்டார். அங்கே ஓரிடத்தில் தங்கி காலட்சேபம் செய்தார். அவரிடம் கூட்டத்தினர்,""இங்கே வர மறுத்தீர்களே! இப்போது எப்படி வந்தீர்கள்? என்று கேட்டனர்.
எம்பார் அவர்களிடம், ""இதோ! இந்த பக்தர் தொடர்ந்து ஸ்ரீரங்கம் வந்து என்னை அழைத்ததால் தான் நான் இங்கு வந்தேன் என்று நினைப்பவர்கள் கையைத் தூக்குங்கள், என்றார். ஒரு சிலர் கை தூக்கினர். அடுத்து, ""நானாகவே மனம் மாறி வந்தேன் என்று நினைப்பவர்கள் கை தூக்குங்கள், என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். இப்படியாக வந்திருந்தவர்கள் அனைவரும் கை தூக்கியாயிற்று. கை தூக்காதவர் எம்பார் மட்டுமே. ""நீங்கள் நினைப்பது போல் இல்லை. அந்த பக்தர் கூப்பிட்டதாலும் வரவில்லை, நானாகவும் வரவில்லை. பகவான் நினைத்தான், அதனால் வந்தேன், எல்லாம் அவன் செயல், என்றார்.