பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
12:04
திருப்பதி :மார்ச்.13 முதல் மே 31ம் தேதி வரை, திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிசெலுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்திரவின்படி நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால், திருமலையிலும் மார்ச்.18ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அது தற்போது மே.3ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து வகையான கைங்கரியங்களும் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடந்து வருகிறது.
இந்நிலையில், மார்ச்.13ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவோ, அஞ்சலகம் வாயிலாகவோ ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள், இதர தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி செலுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இவற்றை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் டிக்கெட் சம்மந்தப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு எண், ஐ,எப்.எஸ்.சி கோட் உள்ளிட்ட விவரங்களை, helpdesk@tirumala.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். பக்தர்கள் அனுப்பிய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், அவர்களின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.