காஞ்சி மகாசுவாமிகள் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வானதி பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு. சுவாமிகளின் சொற்பொழிவுகளை ‘தெய்வத்தின் குரல்’ என்னும் தொகுப்பாக வெளியிட்டவர் இவர். அவரது வாழ்வில் நடந்த நிகழ்வு இது. ஒருமுறை இவரது தங்கை மீனாள் உடல்நலக்குறைவுக்கு ஆளானார். அவர் பிரமை பிடித்த மாதிரி இருந்ததால் சரிவர சாப்பிடவோ, துாங்கவோ முடியவில்லை. குடும்பத்தினருடன் பேசுவதும் குறைந்தது. எத்தனையோ மருத்துவர்கள் பரிசோதித்தும் பலனில்லை. இந்நிலையில் சென்னை எண்ணுாருக்கு அருகிலுள்ள காட்டுப்பள்ளி என்னும் கிராமத்தில் மகாசுவாமிகள் முகாமிட்டிருந்தார். ‘சுவாமிகளிடம் பிரச்னையைச் சொன்னால் தீர்வு கிடைக்கும்’ எனக் கருதிய திருநாவுக்கரசு, குடும்பத்தினருடன் தரிசிக்கப் புறப்பட்டார். பிரசாதம் வழங்கி ஆசியளித்த மகாசுவாமிகளிடம், தங்கையின் உடல்நிலை குறித்த கவலையை தெரிவித்தார் திருநாவுக்கரசு. உற்றுப் பார்த்த சுவாமிகள், ‘‘உன் தங்கையை தினமும் திருமுருகாற்றுப்படை படிக்கச் சொல். குணம் உண்டாகும்’’ என்றார். ‘‘அவளுக்கு படிக்கத் தெரியாதே?’’ என்றார் கவலையுடன். ‘‘பாதகம் இல்லை. நக்கீரர் எழுதிய முருகப்பெருமானைப் பற்றிய நுாலான அதிலுள்ள அருள் மொழிகள் உன் தங்கையின் காதில் விழுந்தால் போதும். குடும்பத்தில் யாராவது ஒருவர் அவளது காதுபட சத்தமாக படிக்கலாம். விரவைில் பலன் கிடைக்கும்!’ என விளக்கினார். தங்கையின் காதுபட திருமுருகாற்றுப்படையைப் படித்தார் திருநாவுக்கரசு. என்ன ஆச்சரியம்! ஒரே மாதத்தில் பூரண நலம் கிடைத்தது. ஆனந்தக்கண்ணீர் மல்க சுவாமிகளிடம் நன்றி தெரிவிக்கப் புறப்பட்டார்.