பதிவு செய்த நாள்
28
ஏப்
2020
09:04
ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் திருநாளில் அவதரித்த ராமானுஜர், தனது 120-ஆவது வயதில் திருநாடு (பரமபதம்) எழுந்தருளினார். அவரது திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், அத்திருமேனி மறுநாள் மேலெழுந்து வந்தது. அதனால் தானான திருமேனி என்று போற்றுவர். யோக நிஷ்டையில் அமர்ந்தவாறு காட்சிய ளிக்கும் அவரது திருமேனிக்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் குங்குமப்பூ மற்றும் பச்சைக்கற்பூரம் கலந்த தைலம் பூசப் படுகிறது. வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. தனிச்சன்னிதியில் வடக்கு திசைநோக்கி அமர்ந்திருக்கும் அவரது தோற்றம் பக்தர்களுக்கு அரு ளாசி வழங்கும் திருக்கோலத்தில் உள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீராமானுஜருக்கு அனைத்து வழிபாடுகளும் நடந்த பின்பே அரங்கனுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன என்பது தனிச்சிறப்பு.
குருவிடம் மந்திர உபதேசம் பெற வேண்டி பலமுறை முயன்றார் ராமானுஜர் கடும் அலைக்கழிப்புக்குப்பின், இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் எட்டெழுத்து மந்திரத்தை குரு உபதேசித்தார். திருக்கோட்டியூர் நம்பி உபதேசித்த அந்த மந்திரத்தை, தான் மட்டும் ஜெபித்து வைகுண்டம் செல்வது முறையல்ல என்றெண்ணிய ராமானுஜர், குருவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்லும் பாக்கியத்தை அடையவேண்டுமென்று, அனைவரையும் கூட்டி, திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தின்மீதேறி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை உரத்த குரலில் கூறியருளினார். இதனையறிந்த அவரின் குருநாதர் ஸ்ரீராமானுஜரை அழைத்து, நீ குருவின் கட்டளையை மீறிவிட்டாய் கொடுத்த வாக்குறுதியை மதிக்காததால் நீ நரகம் செல்வாய் என்று சாபம் கொடுத்தார். ஆனால் ராமானுஜர் தன் இறுதிக்காலம் வரை வைணவத்திற்குத் தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.
மத, இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர் அவர் மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயில்ப்பிரவேசம் செய்ய உறுதுணை புரிந்த புரட்சியாளர். வைணவன் என்றால் உயர்ந்தவன்; அவனுக்கு ஜாதி, மதம் இல்லையென்று சொல்லி, தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில் சொல்லப்பட்டவர்கள் தோள்மீது கை போட்டுக்கொண்டு வீதியில் நடந்துவந்த நிகழ்ச்சியும் உண்டு. அவரது சேவையையும், வைணவத்தில் செய்த புரட்சியையும் கண்டு மகிழ்ந்த பெருமாள். அவருக்குத் தொண்டுசெய்ய விரும்பி ஒரு திருவிளையாடலையும் புரிந்தார். ஒரு சமயம் ராமானுஜர் தனது பிரதம சீடன் நம்பியுடன் திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாபனை தரிசித்தார். அங்கும் வைணவ சம்பிரதாய பூஜை முறையை நடைமுறைப்படுத்த நினைத்தார். அதற்காக அத்தலத்தில் தங்கினார். அவரது செயல்முறைகளையறிந்த அக்கோயிலில் பூஜிப்பவர்கள். தங்கள் பாரம்பரியமான பூஜைமுறைகளை மாற்றாமலிருக்கும்படி பெருமாளிடம் வேண்டினார்கள். அவர்களுக்கு இரங்கினார் பெருமாள். அன்றிரவு ராமானுஜர் தன் சீடருடன் ஒரு மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கருடனை அழைத்து ராமானுஜரின் உறக்கம் கலையாமல் தூக்கிச் சென்று திருக்குறுங்குடியில் விடச்சொன்னார். அப்படியே செய்தார் கருடன்.
காலை கண்விழித்தபோது ராமானுஜர் தான் திருக்குறுங்குடி தலத்தில் இருப்பதை அறிந்தார் எல்லாம் பகவான் செயல் என்று பெருமாளை வண ங்கினார். தன்னுடன் படுத்துறங்கிய சீடன் வடுக நம்பியும் அங்குதான் இருப்பான் என்றெண்ணிய ராமானுஜர் வடுகநம்பியை அழைத்தார். அப்போது, திருக்குறுங்குடி அழகியநம்பி பெருமாள், சீடர் உருவத்தில் வந்து ராமானுஜர் முன் கைகூட்டிப் பணிந்து நின்றார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ராமானுஜர் நீராடி வந்தபின் வழக்கம்போல் சீடனுக்கு திருநாமம் இட்டு, அவன் முகத்தைப் பார்த்து நம்பி உன்முகம் தெய்வாம்சம் பொருந்தித் திகழ்கிறது உன்னில் நான் பெருமாளையே காண்கிறேன். இன்று நான் உனக்கிட்ட திருநாமம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்றார். பின்னர், கூடையிலிருந்த மலரையெடுத்து வடுகநம்பியின் காதுகளில் வைத்தார் நம்பி இப்பொழுது உன் அழகு மேன்மேலும் சிறந்து காணப்படுகிறது என்று மகிழ்ந்தார்.
இருவரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். கொடிமரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, சீடரான நம்பி திடீரென்று மாயமாகி விட்டார். மூலஸ்தானம் சென்ற ராமானுஜர் அழகிய நம்பி பெருமாள் நெற்றியில், வடுக நம்பிக்கு தானிட்ட திருநாமமும், காதுகளில் வைத்த பூவும் அழகாகத் திகழ்வதைக் கண்டார். அப்போதுதான் தன் சீடன் வடுகநம்பியாக வந்தது பெருமாளே என்பதையறிந்து சிலிர்த்தார். பெருமாளே, இத்தனை நாட்களாக எனக்கு சீடராக வந்து தொண்டு செய்தீரே என்று மனமுருகி வழிபட்டார். பெருமாளை ராமானுஜ நம்பி என்று பெயரிட்டு அழைத்தார். பெருமாளும் யாம் ஏற்றோம் என்றார். குரு சிஷ்ய பாரம்பரியம் உலகில் பரவ வேண்டுமென்றே யாம் சீடனாக வந்தோம் என்று அருள்வாக்கு மொழிந்தார் பெருமாள் சிலநாட்கள் கழித்து உண்மையான சீடன் வடுகநம்பி ராமானுஜர் இருப்பிடம் தேடி வந்துசேர்ந்தார். ராமானுஜரை கருடன் தி ருவனந்தபுரத்திலிருந்து தூக்கிவந்து கிடத்திய பாறை திருப்பரிவட்டப்பாறை என்று போற்றப்படுகிறது. திருக்குறுங்குடி கோயிலிலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இப்பாறை உள்ளது. தகுந்த குருவைத்தேடி அலையும் அன்பர்கள் இங்குவந்து ராமானுஜரை தரிசித்தால் குருவின் திருவருள் கிட்டும் என்பர். ராமானுஜர் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் தங்கியிருந்தபோது ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் பூஜைமுறைகளில் சீர்த்திருத்தம் செய்தார். அதுவே இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.