சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் வருமானமின்றி வறுமையில் வாடும் 40 குடும்பத்தினர், பூட்டியிருந்த கோயிலில் உணவு வேண்டி வழிபாடு நடத்தினர்.சின்னாளபட்டி 1வது வார்டு அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களாக வேலை பார்க்கின்றனர். எஞ்சியவர்கள் மேளம் வாசிப்பது, கட்டுமான பணி, பெயின்டிங் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களில் 40 குடும்பத்தினர் இப்பகுதி சக்திகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த வந்தனர். பூட்டியிருந்த கோயில் முன்பு வருவாய்க்கு வழிகிடைக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர். விழிப்புணர்வு இல்லாததால் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இப்பகுதியினர் கூறுகையில், துாய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., சார்பில் தலா 25 கிலோ அரிசி, அ.தி.மு.க., சார்பில் 5 கிலோ அரிசி, பருப்பு பொருட்களை நிவாரணமாக வழங்கினர். பிற குடும்பத்தினர் 40 நாட்களாக வேலைவாய்ப்பின்றி உணவு, குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். உயிர் பிழைப்பதற்காக அம்மனிடம் நிவாரணம் கேட்டு வழிபட வந்தோம் என்றனர்.