பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
06:04
செல்வம் பெருக அட்சய திரிதியை நாளில் வழிபட வேண்டிய அட்சய லிங்கேஸ்வரர், திருவாரூர் மாவட்டம் கீவளுரில் கோயில் கொண்டிருக்கிறார்.
திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடிந்த பின், முருகன் படைவீரர்களுடன் இத்தலத்திற்கு வந்தார். சூரனைக் கொன்ற பாவம் தீர இங்கு சிவபூஜை செய்து விமோசனம் பெற்றார். கேடுகளை போக்கியருள்வதால் ‘கேடிலியப்பர்’ என்றும், வரங்களை அள்ளித் தருவதால் ‘அட்சய லிங்கேஸ்வரர்’ என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது.
சிவபூஜை செய்த முருகனுக்கு அசுர சக்திகளால் இடையூறு நேராதபடி காவல் காத்த பார்வதி, தனி சன்னதியில் ‘அஞ்சுவட்டத்தம்மன்’ என்னும் பெயரில் அருள்கிறாள். சிவபூஜையைத் தொடங்கும் முன் முருகன் மஞ்சளில் விநாயகர் பிடித்து பிள்ளையார் பூஜை செய்தார். கீவளுரில் இருந்து சற்று துாரத்திலுள்ள மஞ்சாடி என்னும் ஊரில் இந்த விநாயகர் இருக்கிறார்.
நடராஜர் இடது பாதம் ஊன்றி, வலது பாதத்தை துாக்கியபடி பத்து கைகளுடன் காட்சி தருகிறார் இவரை சின்ன வெள்ளியம்பலம் என்று அழைக்கின்றனர்.
திருமால், பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், சந்திரன், வாயு, வசிஷ்டர், மார்க்கண்டேயன், துன்மதி, சந்திரகுப்தன் ஆகியோர் சிவனை வழிபட்டு செல்வ வளம் பெற்றனர். இலந்தை மரம் தல விருட்சமாக உள்ளது.
பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், குபேரனுக்கு சன்னதிகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிரமோற்ஸவம் நடக்கிறது.
செல்வது எப்படி
திருவாரூர் – நாகப்பட்டினம் செல்லும் வழியில் 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்:
அட்சய திரிதியை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மகாசிவராத்திரி
நேரம்
காலை 6:00 – பகல் 12:00 மணி, மாலை 5:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு
04366 – 276 733
அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜர் கோயில்