பதிவு செய்த நாள்
03
மே
2020
11:05
பாலக்காடு: கொரோனா தொற்று காரணமாக, திருச்சூர் பூரம் விழா வழக்கமான யானை அணிவகுப்பு, வாத்ய மேளம், மக்கள் கூட்டம் எதுவுமின்றி வெறும் சடங்காக நடந்தது. கேரளாவின் கலாசார தலைநகர் என அழைக்கப்படும், திருச்சூர் நகரில் வடக்குநாதர் கோவில், உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதத்தில், திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தாண்டு திருச்சூர் பூரம் விழா, மிகவும் அமைதியாக, தாந்திரீக சடங்குகளுடன் நடத்தப்பட்டது.நேற்று காலை பாறமேக்காவு மற்றும் திருவம்பாடி கோவில்களில் ஆறாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, திருவம்பாடி கோவிலில் சீவேலி நிகழ்ச்சி நடந்தாலும், சன்னதியின் வெளியே எழுந்தருளல் நிகழ்ச்சி நடத்தவில்லை. யானை மீது மூலவர் எழுந்தருளல் நிகழ்ச்சி, ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக அந்த சடங்கும் நடத்தவில்லை.கொரோனா பீதி காரணமாக, ஒரு யானை கூட விழாவில் பங்கேற்கவில்லை. பூரம் திருவிழாவில் பங்கேற்கும் எட்டு துணை கோவில்களின் நடைகளும் சாத்தப்பட்டிருந்தன. பாறமேக்காவு, திருவம்பாடி கோவில்களில் பக்தர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. திருச்சூர் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.