மதுரையிலுள்ள கூடலழகர் பெருமாள் கோயிலில், சூரிய மண்டலத் தோற்றம் சிற்ப வடிவில் காணப்படுகிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி இச்சிற்பம் அமைந்துள்ளது. அறுகோண மூலைகளுக்கு நடுவில் சூரியன் காட்சி தருகிறார். இக்கோணங்கள் ஆறும் ஒரு ஆண்டின் ஆறுபருவ காலங்களைக் காட்டுகிறது. ஒற்றைச் சக்கர ரதத்தை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது வாரத்தின் ஏழுகிழமைகளைக் குறிக்கிறது. மூன்று தளங்களைக் கொண்ட இக்கோயிலின் கீழ்தளத்தில் மூலவர் கூடலழகர், ஒரு கையால் பக்தர்களை அழைத்து, மற்றொரு கையால் அபயம் தரும் விதத்தில் உள்ளார். நடு தளத்தில் சூரியனின் அம்சமாக பெருமாள் சூரிய நாராயணராக இரண்டு தேவியருடன் வீற்றிருக்கிறார். மேல் தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள் அருள்பாலிக்கிறார். கூடலழகர் மீதே, பெரியாழ்வார் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நுாறாயிரம்’ என்ற பாசுரத்ததைப் பாடினார்.