பதிவு செய்த நாள்
10
மே
2020
05:05
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் நிறுத்தும் இடத்தை, சீரமைத்து கான்கிரீட் போடும் பணிகள் துவங்கியுள்ளன.
காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெறும். விழாவின் போது, நகரில் தேர் செல்லும் சாலைகள் புதிதாக சீர் செய்யப்பட்டன. இதனால் தேர் நிற்கும் பகுதி பள்ளமாகவும், சாலை உயரமாகவும் உள்ளது. கடந்த இரு வாரம் முன்பு பெய்த மழைக்கு, தேரின் அடியில் தேங்கிய தண்ணீரில் சக்கரங்கள் நனைந்திருந்தன. இதனால் சக்கரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்தது. உடனடியாக கோவில் நிர்வாகத்தினர், தேர் நிற்கும் பகுதியை மேடு செய்ய, கான்கிரீட் போடும் பணிகளை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் கூறியதாவது: தேர் நிற்கும் பகுதி சாலையை விட தாழ்வாக உள்ளது. மழை நீரில் தேரின், இரு மரச்சக்கரங்ள், நான்கு இரும்பு சக்கரங்கள் என, 6 சக்கரங்களுக்கும் பாதிக்கும் நிலை ஏற்பட உள்ளது. அதனால் அப்பகுதியில் கான்கிரீட் போடும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம், தேரை வேறு இடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. பிறகு தேர் நிற்கும், இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, மேடாக கான்கிரீட் போடும் பணிகள் துவங்கியுள்ளன. பணிகள் முடிந்த பிறகு, தேரை நிலை நிறுத்தி, முழுவதும் தகர சீட்டால் செட் போட்டு பாதுகாக்கப்படும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.