பதிவு செய்த நாள்
12
மே
2020
12:05
ஓசூர்: ஓசூரில், சாக்கடை கால்வாயில் கிடந்த ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலையை மீட்ட, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பட்டு தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு நகரில் ரோந்து சென்றனர். அப்போது, காளேகுண்டாவில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., அருகே சாக்கடை கால்வாயில், 1.5 கிலோ எடையும், 24 செ.மீ., உயரமும் உள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கிடந்துள்ளது. அதை அங்கிருந்து மீட்ட போலீசார், அதை டவுன் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்தனர். சிலை குறித்த தகவல், ஓசூர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஓசூர் தாசில்தார் வெங்கடேசன் அங்கு வந்து சுவாமி சிலையை பார்வையிட்டார். பின், அவரிடம், ஆஞ்சநேயர் சிலையை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஒப்படைத்தார். சாக்கடையில், சுவாமி சிலை கிடந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.