பதிவு செய்த நாள்
12
மே
2020
01:05
தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டதால், வாழ்வாதாரமின்றி பல குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக, யுனெஸ்கோ அமைப்பு, அங்கீகாரம் அளித்துள்ளது.இ க்கோவில், வெறும் வழிப்பாட்டு தலம் மட்டுமல்ல; மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கோவிலில், நான்கு கால பூஜைகள் நடந்தாலும், பக்தர்கள், சுற்றுலா பயணியர் யாரும் வராமல், வெறுமையாக காட்சி அளிக்கிறது.
கோவில் வாசலில் பூ வியாபாரம் செய்யும் பெண்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள், தஞ்சாவூர் மண்ணுக்கே பெருமை சேர்க்கும் தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள், கிளி ஜோதிடம், ஆட்டோ, கார் ஓட்டுனர்கள். டூரிஸ்ட் வழிகாட்டிகள், பிரசாத கடை நடத்துவோர் என பலரும், கோவில் வாசல் எப்போது திறக்கப்படும், என காத்திருக்கின்றனர்.வியாபாரிகள் கூறுகை யில், நாங்கள், ஆண்டாண்டு காலமாக, கோவிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். சுற்றுலா பயணியர், பக்தர்கள் வராததால், வியாபாரம் முடங்கி, அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சிரமப்படுகிறோம் என்றனர்.