பதிவு செய்த நாள்
25
மே
2020
01:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், ராமானுஜர் வாழ்ந்த, உடையவர் திருமாளிகையின் முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமானுஜரின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், 1017ல் அவதரித்த, மஹான் ராமானுஜர், தன் தந்தையின் மறைவுக்கு பின், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிழக்கு ராஜகோபுரம் அருகே வீடு கட்டி குடியேறினார். ராமானுஜர் வசித்த வீடு, தற்போது உடையவர் திருமாளிகை என, அழைக்கப்படுகிறது. இங்கு, 3 அடி உயரமுள்ள ராமானுஜரின் பளிங்கு சிலை அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. உடையவர் திருமாளிகை முன், இரவில், சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, பக்தர் ஒருவர் கூறியதாவது:ராமானுஜரும், அவரது குருவான, பெரிய நம்பிகள் பயன்படுத்திய புனித கிணறு, உடையவர் திருமாளிகை முன் உள்ளது.இங்கு, இரவு நேரத்தில், சமூக விரோதிகள் சிலர், மது அருந்துகின்றனர்; காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை, அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர்.
கடந்த வாரம், பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய சமூக விரோதிகள், குடிபோதையில், முட்டையை நுழைவாயிலில் உடைத்து, அசிங்கப்படுத்துகின்றனர்.இப்பகுதியில் போலீசார் ரோந்து வருவதோடு, உடையவர் திருமாளிகை முன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.