பதிவு செய்த நாள்
25
மே
2020
02:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஜூன், 1 முதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கையில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 20 முதல், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு, தினமும் ஆறு கால பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில் வரும், 31ல் ஊரடங்கு உத்தரவு முடிகிறது. இதையடுத்து, ஜூன், 1 முதல், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக, ஊழியர்களுடன் கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சமூக இடைவெளியுடன், நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் அனுமதிப்பது, கோவில் வளாகம் முழுவதும் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துவது, கோவிலினுள் நுழையும் பக்தர்கள் கண்டிப்பாக, முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தல், கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்த செய்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அறநிலையத்துறை மூலம், கோவிலை திறப்பதற்கான உத்தரவுகளை எதிர்பார்த்து தயார் நிலையில் உள்ளனர். உத்தரவுகள் வந்தவுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.