பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
11:06
புதுடில்லி : ஊரடங்கால் மூடப்பட்டிருந்த, நாட்டின் பெரும்பாலான கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், நேற்று முதல் திறக்கப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பின் திறக்கப்படுவதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன், பாதுகாப்பு கவசம் அணிந்து வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு, மார்ச், 24 நள்ளிரவில் இருந்து அமல்படுத்தப்பட்டபோது, வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. நான்கு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது, சில சலுகைகளும், கட்டுப்பாடு நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டன. ஆனாலும், வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நான்கு கட்ட ஊரடங்கு முடிந்த பின், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஜூன், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், மால்கள் எனப்படும் வணிக வளாகங்களை திறக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடு தளர்வு: அதன்படி, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு, பல்வேறு மாநில அரசுகள், அறிவிப்பை வெளியிட்டன. வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; முக கவசம் அணிவது கட்டாயம்; ஒரே நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, பல நிபந்தனைகளுடன், இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு மாதங்களுக்குப் பின், கோவில்கள், மசூதிகள், சர்சுகள், குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிரசாதங்கள், புண்ணிய தீர்த்தங்கள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்ததாக, நாடு முழுதும் வரும்செய்திகள் தெரிவிக்கின்றன.உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோவிலில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபட்டார்.
டில்லியில் உள்ள பங்கலா சாகிப் குருத்வாரா உட்பட பல வழிபாட்டு தலங்களில், கிருமி நாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. அந்த வழியாக மட்டுமே செல்ல, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.உத்தர பிரதேசத்தின் கான்பூரில், 10ம் தேதி தான் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள போபால், இந்துார் ஆகியவற்றிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.கடுமையான பாதிப்பு இருந்தபோதும், தேசிய தலைநகர் டில்லியில், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டன. அனைவருக்கும் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
சாத்ரபுரில் உள்ள கோவிலில், முதல் ஒரு மணி நேரத்தில், 300 பக்தர்கள் வந்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.காலை, 5:00 மணி வரை ஊரடங்கு உள்ளதால், முதல் தொழுகை நடத்தப்படவில்லை என, ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம், சையது அஹமது புகாரி தெரிவித்தார். பங்கலா சாஹிப், சிஸ் கஞ்ச், ரகாப் கஞ்ச் உள்ளிட்ட பிரபல குருத்வாராக்களில், சீக்கியர்கள் அதிக அளவில் வழிபட்டனர்.
ராமர் கோவில்: உத்தர பிரதேசம் அயோத்தியில், ராமருக்கான தற்காலிக கோவில் திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, தகர கூரை வேயப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலை, சில மாதங்களுக்கு முன், தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு, வழிபாடுகள் நேற்று நடந்தன.அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. லக்னோவில் உள்ள ஈட்கா மசூதி நேற்று திறக்கப்பட்டது.
திருப்பதி: நாட்டின் மிகப் பெரும் பணக்கார கோவிலான, ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில், வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் நேற்று திறக்கப்பட்டது. முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என, அறிவிக்கப்பட்டிருந்தது.வழக்கமாக, ஒரு நாளில், ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்து வந்த நிலையில், தற்போது, 6,873 பேருக்கு மட்டுமே, ஆன்லைன் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவிலும், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.அதே நேரத்தில் காசி விசுவநாதர் கோவில், வைஷ்ணவதேவி கோவில், மதுராவின் பங்கே பிஹார் கோவில், பஞ்சகுலாவின் மானசாதேவி கோவில் ஆகியவை திறக்கப்படவில்லை. லக்னோவின் மிகவும் பழமையான ஆசிபி மசூதியும் மூடப்பட்டிருந்தது.
நான்கு மாநிலங்கள், ஜம்முவில் மூடல்: ஏ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள, 820 புராதன கட்டடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, தமிழகம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் இவை திறக்கப்படவில்லை. மஹாராஷ்டிராவில், 65; ராஜஸ்தானில், 28; ஒடிசாவில், 46; தமிழகத்தில், 75; ஜம்மு - காஷ்மீரில், ஒன்பது பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், வழிபாட்டு தலங்களாக உள்ளன. இவை, நேற்று திறக்கப்படவில்லை. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், 14 வழிபாட்டு நினைவிடங்களும் திறக்கப்படவில்லை.
தாஜ்மஹாலை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மசூதிகள் உள்ளிட்டவற்றை திறக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஒடிசாவில், ஜூன், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்குள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மஹாராஷ்டிரா, தமிழகம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும், வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.