காரைக்கால் : காரைக்கால் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ் வொரு வருடமும் மாங்கனி திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெறும்.இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக மாங்கனித் திருவிழா பக்தர்களின்றி எளிமையான முறையில் அனைத்து நிகழ்ச்சிகளும் கைலாசநாதர் கோவிலில் நடைபெறுகிறது. கடந்த 1ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியார், பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு வெள்ளை சாற்றி புறப்பாடு நடைபெற்றது. நேற்று ஸ்ரீபிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு திரவங்கள் மூலம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வானை, சமேதராக முருகன்,விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி இன்று (4ம்தேதி) காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் புறப்பாடு நிகழ்ச்சி உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறுகிறது. மதியம் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுதுபடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாங்கனி நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் நலன்கருதி (www.karaikal temples.com) என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.