பதிவு செய்த நாள்
08
ஜூலை
2020
04:07
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, முன்னோர்களால் அமைக்கப்பட்டு இன்றும் மக்களால் வழிபடும் புலிக்குத்தி கல்லை பாதுகாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா வடக்கு கண்ணாடிப்புத்துார் பகுதியில், விளைநிலங்களுக்கு அருகிலுள்ள ஒரு கற்சிலையை, தலைமுட்டி சாமி என மக்கள் வழிபடுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்கு வசிக்கும் மக்கள் தலைவலி, உடல்வலி ஏற்பட்டால், இந்த சிலைக்கு முன்பு வெற்றிலை, பாக்குடன் ஒண்ணேகால் ரூபாய் காணிக்கை வைத்து வணங்குகின்றனர். இதோடு இதன் நெற்றியில் தங்களுடைய நெற்றியை மூன்று முறை முட்டி வழிபடுகிறோம். இதனால் இது தலைமுட்டிசாமி என அழைக்கப்படுகிறது. இது எந்த காலகட்டத்தில் அமைக்கப்பட்டது என தெரியவில்லை. புதர்களுக்கு மத்தியில் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இயற்கை சீற்றம், காலச்சூழல் காரணமாக இந்த வரலாற்று நினைவுச்சின்னம் சிதைந்து போகவும், உடைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க போதிய பராமரிப்பும், பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றனர்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது: சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கலாம். அன்றைய காலகட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க, வீரர்களை நியமிப்பது உண்டு. புலி அல்லது காட்டு மிருகங்கள் கால்நடைகளை வேட்டையாட வரும் பொழுது, இந்த வீரர்கள் தடுத்து நின்று போராடி, புலியை குத்திக் கொன்றதன் நினைவாக இது போன்ற சிலைகள் அமைப்பது வழக்கம். இது புலிகுத்திக்கல் என குறிப்பிடப்படுகிறது.இரண்டு அடிக்கும் மேலான உயரத்தில், 3 அடி அகலத்தில் சிலை உள்ளது. இதில் ஒரு வீரன் புலியை எதிர்த்து நின்று போராடுவது போலவும், அவன் கையில் உள்ள கத்தியை புலியின் வயிற்றில் குத்துவது போலவும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.