சந்தை கூடும் இடத்தில் உயரமான இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். ‘‘அன்பார்ந்த நண்பர்களே! அருமையான யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை அறிய நினைப்பவர்கள் சற்று நில்லுங்கள்’’ என்றார் முல்லா. என்ன சொல்லப் போகிறார் முல்லா என்பதை அறிய கூட்டம் கூடியது. ‘‘நண்பர்களே! உழைக்காமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விருப்பமா? அவர்கள் மட்டும் கைதுாக்கலாம்’’ என்றார் முல்லா. அங்கிருந்த அத்தனைபேரும் கை துாக்கினர். ‘‘உழைக்காமல் சுகமாக வாழ என்ன வழி சொல்லுங்கள்?’’ என்று பலர் கூச்சலிட்டனர். முல்லா தாம் நின்ற இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். ‘‘என்ன ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே?” என தடுத்தனர் சிலர். ‘‘நண்பர்களே எத்தனை சோம்பேறிகள் நம்மூரில் இருக்கிறார்கள் என அறிய விரும்பினேன். ஊரிலுள்ள அனைவரும் சோம்பேறிகள்தான் என்ற உண்மை புரிந்தது. உழைக்க மனம் இல்லாதவர்களிடம் எனக்கு என்ன வேலை? நான் வருகிறேன்’’ என்றபடியே முல்லா ஊரை விட்டு புறப்பட்டார்.