பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் வீரத்தில் சிறந்தவன். பகவான் கிருஷ்ணனிடம் பக்திகொண்டவன். இவனது மகன் தாமரத்வஜனும் தந்தையைப் போல் வீரம் கொண்டவன். ஒருமுறை தர்மர் அஸ்வமேத யாகம் செய்தார். பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, யாகக் குதிரையை அர்ஜுனனின் காவலில் அனுப்பி வைத்தார். அதே சமயம் மயூரத்வஜனும் அஸ்வமேத யாகம் நடத்தினான். யாகக் குதிரையை தாமரத்வஜன் பொறுப்பில் அனுப்பி வைத்தான். மணிப்பூரில் இரண்டு கோஷ்டியினரும் சந்தித்துப் போர் செய்தனர். தாமரத் வஜன் அர்ஜுனனைத் தோற்கடித்து 2 குதிரைகளுடனும் தன் நாடு திரும்பினான். கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் அனுப்பப்பட்ட அர்ஜூனனைத் தன் மகன் தோற்கடித்ததில் மயூரத்வஜனுக்கு அத்தனை உடன்பாடில்லை. கிருஷ்ணரை அவமானப்படுத்தி விட்டோமோ என வருந்தினான். போரில் தோற்ற அர்ஜுனன் கோபமாக இருந்தான். கிருஷ்ணர் அவனை சமாதானம் செய்தார். பின்பு அந்தண வேடம் பூண்டு, அர்ஜுனனைத் தன் சீடன் போல வேடமணியச் செய்து, மயூரத்வஜனின் அரண்மனையை அடைந்தனர். இருவரின் பேரழகு கண்ட மன்னன், இப்படியும் அழகர்கள் பூமியில் உள்ளனரா? என வியப்படைந்தான்.
அவர்களை உபசரித்து வந்த காரணத்தை சிரத்தையுடன் கேட்டான். கிருஷ்ணர் அவனிடம்,மன்னா? நாங்கள் இருவரும் என் மகனுடன் காட்டு வழியே வரும்போது என் மகன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டுக் கொண்டு விட்டான். அச்சிங்கத்திடம் என்னை எடுத்துக்கொள். என் மகனை விட்டுவிடு என்று பலமுறை வேண்டியும் அச்சிங்கம் விட மறுத்துவிட்டது. என்ன செய்தால் என் மகனை விடுவாய் என்று கேட்டதற்கு, ரத்தினபுரி மன்னன் மயூரத்வஜன் தன் முழு சம்மதத்துடன் தன் மனைவி ஒருபுறமும் மகன் ஒருபுறமும் நிற்க, தன்னை இரண்டாக அறுத்து அதில் வலப்பாகத்தை எனக்கு கொடுத்தால் உன் மகனை விட்டுவிடுகிறேன் என்றது, என்றார். மயூரத்வஜன் மகிழ்ச்சியுடன் தன் உடலைத் தருவதற்கு ஒப்புதல் அளித்தான். அது சமயம் மன்னன் மனைவி, ஐயா! கணவனின் உடலில் மனைவி பாதியாகையால் (அர்த்தாங்கினி) எனது உடலை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூற, அந்தணர், அம்மா! மனைவி கணவனின் இடப்பாகத்திற்கு உரியவள். சிங்கம் கேட்பது மன்னனின் வலப்பாகத்தையே, என்று கூறினார். அப்போது மன்னன் மகன் தாமரத்வஜன், நான் என் தந்தைக்கு சமமானவன். என் உடலை எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா என அந்தணனிடம் வேண்டினான். அந்தணர் அதற்கும் மறுத்துவிட்டார்.
மயூரத்வஜன் தாம் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானின் திவ்ய நாமங்களை பக்தியுடன் சொல்லியபடி இரு தூண்களுக்கு இடையில் வந்து அமர்ந்துகொள்ள, மன்னனின் மனைவியும், மகனும் மன்னனின் உடலை அறுக்கத் தொடங்கினர். தலை அறுபட்டதும் மன்னனின் இடது கண்ணிலிருந்து நீர் வரலாயிற்று. அதைப்பார்த்த அந்தணர், வருத்தத்துடன் அளிக்கும் பொருள் எனக்கு வேண்டாம் எனக் கூறினார். சுவாமி! கண்ணில் நீர் வருவதற்கு காரணம் வருத்தம் அன்று. வலியும் அன்று. ஒரே சமயத்தில் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தபோதிலும் வலது புறம் செய்த புண்ணியம் இடதுபுறம் செய்யவில்லையே என்றும், தானும் அந்தணருக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம்தான் இடது கண்ணில் இருந்து நீர் வடியக் காரணம் என்றான் மன்னன் மயூரத்வஜன். மன்னன் கூறியதைக் கேட்ட பகவான் மகிழ்ச்சி அடைந்தார். அந்தணர் வடிவம் நீங்கி சங்கு சக்கரம் தாங்கி காட்சி தந்து மயூரத்வஜனின் உடலைத் தொட்டார். அறுபட்ட உடல் ஒன்றுசேர்ந்து முன்பு இருந்ததைவிட அதிகப் பொலிவுடன் விளங்கினான் மன்னன் மயூரத்வஜன். பகவானைப் போற்றித் துதித்தனர் மன்னன், மனைவி, மகன் மூவரும். அர்ஜூனன் தான் தோற்றதற்கு காரணம் மயூரத்வஜனின் கிருஷ்ணபக்தியே என்பதை உணர்ந்தான். பகவான் அவர்களுக்குப் பல வரங்கள் தந்து மறைந்தார்.