பதிவு செய்த நாள்
14
மே
2012
03:05
சிவபெருமான் பார்வதியுடன் ஜோதிஷ்கம் எனப்படும் மேருமலையில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி கங்காதேவி, தேவகுருக்கள், நந்தி தேவர், சித்தர்கள், தபஸ்விகள், யட்சர்கள் உடனிருந்தனர்.அப்போது தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தேவர்களை அழைக்க தேவலோகம் சென்றான். இவன் அழைத்தது தான் தாமதம்! எல்லா தேவர்களும் யாகத்திற்கு கிளம்பி விட்டனர். சிவனை மட்டும் அழைக்கவில்லை. தன் மகள் தாட்சாயணியைத் திருமணம் செய்து கொடுத்திருந்தும் யாகத்திற்கு அழைக்காமல் புறக்கணித்து விட்டான் தட்சன். யாகங்களின் மூலம் கிடைக்கும் அவிர்பாகம் என்னும் பலன், சிவனுக்கு கிடையாது என்ற விதியின் கீழ் அவ்வாறு செய்தான். இருந்தாலும் பார்வதிக்கு இதில் வருத்தம். உலக முதல்வரான தன் கணவருக்கு இல்லாத மதிப்பு பிற தேவர்களிடம் என்ன இருக்கிறது? என்ற அடிப்படையில் அவரை யாகத்திற்கு சென்று பாகம் பெற்றுவர அனுப்பினாள். பிநாகம் என்ற வில்லுடன் சிவன், யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றார்.
அங்கு அவரை தட்சன் மதிக்காததால் யாகத்தை அழித்தார். சிவனின் பூதகணங்கள் சிலரை தூக்கி யாககுண்டத்தில் போட்டன. பலரை வாயில் போட்டு மென்றன. உடனே யாகபலன், ஒரு மானின் வடிவில் வானை நோக்கி சென்றது. சிவபெருமான் அதைத் தொடர்ந்து சென்றார். அப்போது கோபத்தில் சிவனின் நெற்றியிலிருந்து ஒரு வியர்வைத்துளி நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து அக்னி தோன்றியது. இந்த அக்னியிலிருந்து சிவந்த கண்கள், மஞ்சள் நிற மீசை, விறைப்பான தலைமுடி, ரோமத்துடன் கூடிய உடல், முட்டை வடிவ கண், கோட்டான் போன்ற உருவம் கொண்டு கருப்பான உடையில் ஜ்வரம் என்ற பயங்கர பூதம் தோன்றியது. அந்த பூதம் கோபத்துடன் யாகத்தை அழித்தது. தேவர்களையும், ரிஷிகளையும் ஓட ஓட விரட்டியடித்தது. உயிரினங்கள் எல்லாம் மிரண்டன. பூமி நடுங்கியது. கவலையடைந்த பிரம்மா,சிவபெருமானே! முனிவர்களும், தேவர்களும் தங்களது கோபத்தால் கலக்கமடைகிறார்கள். தங்களை மதிக்காமல் யாகத்தை நடத்தியது தவறுதான். உங்களுக்குரிய பங்கை கொடுத்து விடுவார்கள். அவர்களை மன்னித்தருள வேண்டும், என்றார்.
பிரம்மனின் வேண்டுகோளை சிவன் ஏற்றார். சிவனிலிருந்து தோன்றிய ஜ்வரத்தை அப்படியே விட்டால் இந்த பூமி தாங்காது என்பதால், பல உயிரினங்களிலும் பிரித்து வைத்தார் பிரம்மா. இந்த ஜ்வரமே ஜுரதேவர் என்ற பெயரில் கோயில்களில் இருக்கிறது. இவர் அக்னி வடிவாய் பிறந்தவர் என்பதால், இவருக்கு குளிர்ச்சியைத் தரும் மிளகை அரைத்துப் பூசி வழிபாடு செய்கிறார்கள். இவரது உடலில் இருந்த உஷ்ணத்தை சிவபெருமான் யானையின் மண்டையில் திணித்து மண்டைக் கொதிப்பாகவும், மனிதர்களின் உடலில் திணித்து ஜுரமாகவும், பாம்புகளின் உடலில் திணித்து தோலே உரிந்து போகும் (சட்டை கழற்றுதல்) அளவுக்கும் என அந்தந்த உயிரினங்களின் தன்மைக்கேற்ப பிரித்தார். இதனால் காய்ச்சல், தலைவலி வந்தால் ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி அவரை குளிர்வித்தால் நமது உடலும் குளிரும் என்பார்கள். உடலில் சூடு அதிகமாகிவிட்டால் நாம் தளர்ந்து விடுகிறோம். இரண்டு கால்கள் இருந்தாலும் அவை வலிமையற்று படுத்து விடுகிறோம். இதனால் தான் ஜுரதேவருக்கு மூன்றாவதாக ஒரு கால் இருக்கிறது. நடுவில் இருக்கும் அவரது மூன்றாவது திருவடியை வணங்கினால், நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.