சென்னை : கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் தினம் 12 வகையான யோகா பயிற்சி மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது மக்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் சித்தா மருத்துவ உணவுகள் யோகா பயிற்சிகள் குறித்த விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி தினமும் 12 வகையான யோகா பயிற்சி செய்வதன் வாயிலாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வராமல் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:
பவனமுக்தாசனம்: படுத்த நிலையில் இரு கால்களையும் சேர்த்து வைத்து கால்களை மேலே உயர்த்தி வயிற்று பகுதி யோடு அழுத்தி இரு கைகளை சேர்த்து பிடித்து கொண்டு மூட்டிற்கு இடையில் தாடையினை வைத்து கொள்ள வேண்டும்.
மக்கராசனம்: குப்புறப்படுத்து தலை தோள்பட்டை மற்றும் தாடையை மேலே உயர்த்தி இரு கைகளால் தாங்கி கொள்ள வேண்டும். இந்நிலையில் கண்கள் மூடி இருக்கவும்.சலபாசனம்குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் தொடையின் கீழே வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி இரு கால்களையும் மேலே துாக்கி முடிந்த வரை உயர்த்தவும்.
மேரு வக்ராசனம்: கால்களை முன்னோக்கி நீட்டி முதுகுத்தண்டை நேரே வைத்து அமரவும். வலது காலை மடித்து குதிங்கால் இடது முட்டியின் உள்பகுதியில் படும்படி வைக்கவும்.மூச்சை உள்ளே இழுத்து வலதுபுறம் பின் திரும்பி இரு கைகளையும் முதுகு தண்டின்பின்பிறம் வைக்கவும். இதைபோல் இடதுபுறமும் செய்யவும்.
கோமுகாசனம்: கால்களை முன்னோக்கி நீட்டி வலது காலை மடித்து குதிங்கால் இடது இடுப்பின் வெளி பகுதியில் படும்படி வைக்கவும். இரு கைகளையும் பின்னோக்கி மடக்கி கோர்க்கவும். இதேபோல் இடதுபுறமும் செய்யவும்.
தடாசனம்: இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நேராக நிற்க வேண்டும். மூச்சை இழுத்தபடி குதிங்காலை உயர்த்தி இரண்டு கைகளையும் இணைத்து தலைக்கு மேல் நேராக உயர்த்த வேண்டும்.
திரிகோனாசனம்: கால்களை குறைந்தது ஒரு அடி அகற்றி வைக்கவும். முச்சினை வெளிவிடும்போது பக்கவாட்டில் குனிந்து வலது கையை வலது குதிகால் அருகில் வைக்கவும்.இதேபோல் இடதுபுறமும் செய்யவும்.
நாடி சுத்தி பிராணாயாமம்: வலது நாசியினை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து பின் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். மீண்டும் வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து பின் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக வெளியிட வேண்டும்.
ஓம் உச்சரிக்கும் தியான பயிற்சி: கண்கள் மூடியபடி அமைதியான நிலையில் தலை கழுத்து முதுகுதண்டு வடத்தை நேராக வைத்து கெள்ளவும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது ஓம் இல்லையேல் அ...உ... ம்... என உச்சரித்து சுவாசத்தின் மீது கவனம் வைத்து கொள்ள வேண்டும்.
நாசிகளை சுத்தம் செய்யும் பயிற்சி: உப்பு நீர் உள்ள நேத்தி பாத்திரத்தை மூக்கு துவாரத்தில் நுழைத்து முன்புறம் குனிந்து நிற்கவும் தலையை ஒருபுறமாக சாய்த்து வாயை திறந்து வைத்து நீர் வெளியேறுமாறு செய்யவும். இதேபோல் மறு மூக்கு துவாரத்தில் பயிற்சி செய்யவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.