பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
12:07
சென்னை: எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன; எத்தனை மூடப்பட்டுள்ளன; அவற்றை சார்ந்துள்ள பணியாளர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி, அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தினமலர் நாளிதழின், திருச்சி - வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளர், ஆர்.ஆர்.கோபால்ஜி தாக்கல் செய்த மனு:கோவில்களில் இருந்து பெறப்படும் வருவாயில், தற்போது, 300 கோடி ரூபாய் உபரி நிதியாக உள்ளது. இந்த நிதியில் இருந்து, அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்களுக்கு உதவி செய்யலாம்.
இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய், மற்ற பணியாளர்களுக்கு, 7,500 ரூபாய் வழங்கும்படி, அறநிலையத் துறைக்கு, 2020 மே, 20ம் தேதி மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. இவர்களுக்கு நிதி உதவி வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் வாதாடியதாவது: அறநிலைய துறையின் பதில் மனுவில், 13 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மட்டுமல்லாமல், இதர ஊழியர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் வாதாடினார். அறநிலைய துறை சார்பில், வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜரானார். இதையடுத்து, தமிழகம் முழுதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன; எத்தனை திறக்கப்பட்டுள்ளன; மூடப்பட்டுள்ள கோவில்களை சார்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ஆகிய விபரங்களை, அறநிலைய துறை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.