தியாகதுருகம்: ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்துக்களின் வாழ்வியலில் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. குடும்பத்தில் நிகழும் அனைத்து சுப காரியங்களும் முதலில் குலதெய்வ வழிபாட்டை முன்வைத்தே மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் கஷ்டங்கள் ஏற்படும் போதும் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபட்டு மனநிம்மதி அடைகின்றனர். வழக்கமாக ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது உயிர் பலியிடுதல், மொட்டை அடித்துக் கொள்ளுதல், காதுகுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செய்வது சிலரின் வழக்கத்தில் உள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இம்மாதத்தில் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பூஜை செய்வது தொன்றுதொட்ட சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வெளிமாநிலங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் சிலர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரசித்திபெற்ற கோவில்கள் அனைத்திலும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. அன்றாட பூஜைகள் மட்டும் தவறாமல் நடந்து வருகிறது. இக்காரணங்களால் ஆடிமாதம் பிறந்தும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆண்டு தோறும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு வரும் பக்தர்களிடையே ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வேறுவழியின்றி தங்களின் ஊருக்கு அருகில் குலதெய்வ கோவில் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கோவிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு செல்கின்றனர். அவ்வாறு செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் வீட்டிலேயே குலதெய்வ சாமியின் படத்தை வைத்து பொங்கலிட்டு, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி மன நிறைவு பெறுகின்றனர். குலதெய்வங்களும் அதன் வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், கொரோனோ நோய் பாதிப்பில் இருந்து விரைவில் அனைவரும் பூரண நலம் பெற வேண்டும், வைரஸ் அழிவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒரே வேண்டுதலாக உள்ளது.