பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
03:07
ஈரோடு: ஆடிப்பூர விழாவையொட்டி, மாநகரில் அம்மன் கோவில்களில், விசஷே அலங்காரம் நடந்தது. ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, ஆடிப்பூரம் என்பதால், ஈரோட்டில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், சுக்கிரமணிய வலசு மகாமாரியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடும் நடந்தது. விழாவில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்றனர். ஆடிப்பூரத்தையொட்டி, வீரப்பன்சத்திரம் சுக்கிரமணிய வலசு மகா மாரியம்மன், தர்பார் ராணி அலங்காரத்திலும்; சூளை அங்காள பரமேஸ்வரியம்மன், சத்தி ரோடு எல்லை மாரியம்மன், வரலட்சுமி அலங்காரத்திலும்; கருங்கல்பாளையம் சமயபுரத்து மாரியம்மன் கன்னி அலங்காரத்திலும், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் மகமாயி அலங்காரத்திலும், கோட்டை பத்ரகாளியம்மன் வெள்ளி கவச அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். அனுமதி இல்லாததால், கோவிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
* பவானி செல்லியாண்டியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதி அம்மன் கோவில்களில், ஆடி இரண்டாவது வெள்ளி சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.