பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
01:07
அயோத்தி: அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், அதை சிறப்பாக கொண்டாட, முஸ்லிம்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள், அடிக்கல் நாட்டு விழாவை, சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து, பைசாபாத் மாவட்டத்தில் வசிக்கும், ஜாம்ஷத் கான் என்பவர் கூறியதாவது:
ராமர் கோவிலின் பூமி பூஜையை, எங்கள் ஹிந்து சகோதரர்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறோம். நாங்கள், முஸ்லிமாக மதம் மாறியுள்ளோம். ராமர் எங்களுடைய மூதாதையர் என, நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். ரஷீத் அன்சார் என்பவர் கூறுகையில், “பூமி பூஜையில் பங்கேற்க, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி கிடைக்காது என்பதால், அந்நாளன்று எங்கள் பகுதியில் இருந்தே, நாங்கள் அதை கொண்டாட இருக்கிறோம்,” என்றார்.
கட்டுமான பணி: இது குறித்து, முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தலைவர் அனில் சிங் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள், சில நாட்களில் துவங்க உள்ளது. அதைச் சிறப்பாக கொண்டாட, முஸ்லிம்கள், மற்ற மாநிலங்களில் இருந்து, அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் கட்டுமானத்திற்காக, சத்தீஸ்கரில் இருந்து, முஸ்லிம் ஒருவர், செங்கற்களை எடுத்து வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
சாலையை அழகுபடுத்த திட்டம்!: அயோத்தி சாலையை அழகுபடுத்த, 55 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ராமர் கோவில் கட்டப்படவுள்ள இடத்திற்கு செல்ல பயன்படுத்தப்படும், 16 கி.மீ., பைபாஸ் சாலையில், பூங்காக்கள், நீரூற்றுகள் மற்றும் அனுமன் சிலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏலம், விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.