மதுரை:இந்தியாவின் புனித புராணமான ராமாயணத்தை தாய்லாந்தின் ராமா மன்னர்கள் ராமகீன் என்ற பெயரில் கொண்டாடுவது போல் பல நாடுகளில் பல பெயர்களில் கொண்டாடுவதை அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இந்நேரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மதுரை எழுத்தாளர் நிரஞ்சனா கார்த்திகை ராஜன்.
அவர் கூறியதாவது: அயோத்தியா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தோல்வியே இல்லாத ஊர் என பொருள். நம்மாழ்வார் திருவாய்மொழியில் நற்பால் அயோத்தியில் வாழும் (நன்மை தரும் தலம்) என்கிறார். வைகுண்டத்தின் சிறு பகுதி அயோத்தியாக ஸ்தாபித்ததால் வைகுண்டத்திற்கு அயோத்தி என்ற பெயரும் உண்டு. ராமர் வைகுண்டம் செல்லும் முன் புல், பூண்டுகளுக்கும் முக்தி அளித்ததால், முக்தி தரும் 7 தலங்களில் அயோத்தி முதல் தலமாக திகழ்கிறது.
தாய்லாந்தில் ராமாயண சித்திரம்: அயோத்தியா என்ற வார்த்தையில் பிறந்த தாய்லாந்தின் பழைய தலைநகரான அயுத்தியா இன்று சுற்றுலா தலமாக உள்ளது. தாய்லாந்தில் ராமகீன் என்ற பெயரில் ராமாயணம் போற்றப்படுகிறது. இங்குள்ள ராஜாக்களை பொதுவாக ராமா என அழைக்கிறார்கள். தற்போது கிங் ராமா டென் ஆட்சி செய்கிறார்.பேங்காக் அரண்மனை வளாகத்தில் உள்ள எமரால்டு புத்தர் கோயிலில் 2 கி.மீ., அளவு சுவரில் 178 ராமாயண காட்சிகள் மியூரல் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதை காண உலகளவில் பல லட்சம் மக்கள் வருகிறார்கள்.
2019ல் சித்திரங்களை அவதார் மியூரல் புராட் டூ லைப் என்ற பெயரில் அனிமேஷன் படமாக எடுத்தனர். பிரா லக் பிரா ராம் என்ற பெயரில் ராமாயணத்தை போற்றும் கம்போடியாவின் லேயாஸ் நகரில் இப்படம் முதலில் திரையிடப்பட்டது.பாலியில் ராமாயண நாடகம்பீகார் - நேபாள எல்லையில் சீதா மரி என்ற இடத்தில் சீதை அவதரித்தார். ஆனால் ராமர், சீதைக்கு ஜனக்பூர் ஜானகி மந்திரில் திருமணம் நடந்தது. இந்தோனேஷியா பாலி உழுவாட்டு பகுதியில் உள்ள 230 அடி குன்று கோயிலில் சூரிய அஸ்தமன நேரம் தினமும் ராமாயண நாடகம் நடக்கும். அங்குள்ள கலைஞர்கள் கெக்கக் டான்ஸ் என்ற பாரம்பரிய நடனத்தில் ராமாயண காட்சிகளை நடிக்கிறார்கள். நாடகத்தில் இலங்கையில் தீ பரவும் காட்சியில் நிஜமாகவே தீ வைத்து வியக்க வைக்கிறார்கள்.
மொரிசீயஸில் ராமாயண் சென்டர்: 2001ல் மொரீசியஸில் ராமாயணத்தை போற்றிட ராமாயண் சென்டர் சட்டம் இயற்றினர். எந்த ஒரு நாடும் இப்படி ஒரு சட்டம் இயற்றவில்லை. 1984 முதல் இன்று வரை இந்நாடு பல்வேறு நாடுகளில் சர்வதேச ராமாயண கருத்தரங்கு நடத்துகிறது.சீதையை கவர்ந்த ராவணன் இலங்கை நுவரேலியாவில் சிறை வைத்ததால் அதை அசோகவனம் என்கிறார்கள். இங்கு சீதைக்கு கோயில், அருகேயுள்ள குன்றில் ஹனுமன் பாதம் உள்ளது. ஸ்ரீராமரின் மென்மை குணம் வெளிநாட்டினரை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை மேற்கண்ட நாடுகளுக்கு நான் சென்ற போது தெரிந்து கொண்டேன், என்றார்.