பதிவு செய்த நாள்
11
ஆக
2020
09:08
பல்லடம்: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி பாராயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டத்தை கண்டித்து, வேல் பூஜை, மற்றும் கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும் என, ஆதீனங்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், வேல் பூஜை, மற்றும் பாராயணம் நடந்தது.
பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில் கடந்த வேல் பூஜையை நடத்தி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், "தீயவர்களை அழிக்க சிவனின் நெருப்பில் இருந்து தோன்றியவர் முருக பெருமான். உலகையே அச்சுறுத்தி வந்த சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்து, மக்களை காத்ததாக வரலாறு கூறுகின்றது. அவ்வகையில், இன்று இயற்கை சீற்றம், மற்றும் நோய் தொற்று காரணமாக உலகமே அல்லோலப்பட்டு வருகிறது. கந்தனின் கருணையால் மட்டுமே, இதுபோன்று துன்பங்களிலிருந்து விடுபட முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. இதற்காகவே, ஆதீனங்கள், சிவனடியார்கள், மற்றும் ஆன்மிக பெரியோர்களின் அறிவுரையின்படி, வேல் பூஜை, மற்றும் கந்த சஷ்டி கவச பாராயணம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. முருக பெருமானை வழிபட்டு, துன்பங்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். வரலாற்றில் இதுவரை நிகழாத வகையில், கோவில்கள் பூட்டப்பட்டு இருக்கின்றன. எனவே, நோய் துன்பங்கள் நீங்கி, கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சஷ்டி தினமான நேற்று முன்தினம், மாலை 6.00 மணிக்கு, காமாட்சிபுரி ஆதீனம் வேல் பூஜையை நடத்தி கொடுத்தார். தொடர்ந்து, கந்த சஷ்டி கவச பாராயணம், மற்றும் சிவ பெருமானுக்கு பூஜைகளும் நடந்தன.