பதிவு செய்த நாள்
16
ஆக
2020
03:08
போபால் : ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், கடவுள் ராமர் வனவாசம் சென்ற பகுதிகள், சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என, அம்மாநில முதல்வர்கள், நேற்று அறிவித்தனர்.
ம.பி., தலைநகர் போபாலில், நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றிய முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், மாநிலத்தில், ராமர் வனவாசம் சென்ற இடங்கள், சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என, அறிவித்தார்.
மலிவு விலை: இது குறித்து அவர் கூறியதாவது:மாநிலத்தில் ராமர் பயணித்த, சித்ரகூட்டில் இருந்து அமர்கண்டக் வரையிலான இடங்கள், சுற்றுலா தலங்களாக மாற்றப்படும். இதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாநிலத்தின் உயிர்நாடி யான நர்மதா நதியின் அருகில், நர்மதா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதுடன், அதன் அருகிலேயே, மாநில வளர்ச்சிக்காக தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.ஏழைகளுக்கு, மலிவு விலையில் உணவு வழங்கும், தீன்தயாள் ராசோய் யோஜனா திட்டம், மூன்றாண்டுகளுக்கு முன், சில இடங்களில் துவக்கப்பட்டது. அது, மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த சுதந்திர தின விழாவில், தேசிய கொடியேற்றிய முதல்வர் பூபேஷ் பாஹெல் கூறியதாவது:
தாய்வழி: சத்தீஸ்கர் மாநிலம், ராமரின் தாய்வழியில் தொடர்புடையது. அயோத்தியில் இருந்து வெளியேறிய அவர், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, இங்கு தான் கழித்தார். ராமர் மற்றும் மாதா கவுசல்யாவுடன் தொடர்புடைய பகுதிகளை ஒருங்கிணைத்து, சுற்றுலா தலங்களாக மாற்றும் பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.