பதிவு செய்த நாள்
21
ஆக
2020
10:08
புதுடில்லி : பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பான அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இது குறித்து, அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறியதாவது: மன்னர்கள் ஆட்சியில், கோவில்கள் எப்படி கட்டப்பட்டதோ, அதேபோல், அயோத்தியிலும் ராமர் கோவில் கட்டப்படும்.
இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட மாட்டாது. புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படும். 1,000 ஆண்டுகளுக்கு மேல், கோவில் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமான பணிகள் துவங்கிவிட்டன.
சென்னை ஐ.ஐ.டி., உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த இன்ஜினியர்கள், எல் அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து, மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கோவில் கட்டுமான பணி, 36 - 40 மாதங்களில் முடியும் என, எதிர்பார்க்கிறோம். நாகரா பாணியில், கோவில் கட்டப்படும். இது, மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள் கொண்டதாக இருக்கும். கோவில் வளாகம், 57 ஏக்கர் கொண்டதாக இருக்கும். 10 ஏக்கரில், 360 துாண்கள் கட்டப்பட்டிருக்கும். கருவறை, 20 அடி உயரம், 20 அடி அகலத்தில் இருக்கும். நாட்டிலேயே மிகப்பெரிய கருவறை உடைய கோவிலாக, ராமர் கோவில் இருக்கும். 2023 க்குள் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.