பதிவு செய்த நாள்
21
செப்
2020
09:09
புதுடில்லி: தீமையை நல்லது வெல்லும் என்பதை சுட்டிக் காட்டும் வகையில், ராம்லீலா நிகழ்ச்சிகள் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது.
ஹிந்து கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அயோத்தியில், இந்த ஆண்டு நடக்கும் ராம்லீலா நிகழ்ச்சியில், பல பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.நாட்டின் பல இடங்களில், நவராத்திரி பண்டிகையின்போது, ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் இறுதியாக, ராவணனை, ராமர் வீழ்த்தும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகும். டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு இந்தாண்டு நடக்க உள்ள ராம்லீலா நிகழ்ச்சியை மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ராமர் கோவில் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள லட்சுமணன் கோட்டையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அக்., 17 - 25 வரை நடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக, ராமாயணம் குறித்த நாடகம் நடத்தப்படும்.வழக்கமாக, மக்கள் நேரில் பங்கேற்க, நடிகர்கள் நடிப்பர். ஆனால், தற்போது, கொரோனா வைரஸ் பரவலால், இந்த நாடகத்தை, வீடியோவாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராமாயண நாடகத்தில், பல பிரபல நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். டிவி நடிகர், சோனு துகார், ராமராக நடிக்க உள்ளார். கவிதா ஜோஷி, சீதையாக நடிக்க உள்ளார். பா.ஜ., - எம்.பி., மற்றும் நடிகரான மனோஜ் திவாரி, அங்கதனாகவும், மற்றொரு, பா.ஜ., - எம்.பி.,யும், நடிகருமான, ரவி கிஷண், பரதனாகவும் நடிக்க உள்ளனர். பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன், விந்து தாரா சிங், தந்தையைப் போல, ஹனுமன் வேடத்தில் நடிக்கிறார்.இவர்களைத் தவிர, பிரபல நடிகர் சபாஷ்கான், ராவணனாகவும், நடிகை ரிது சிவபுரி, கைகேயியாகவும் நடிக்க உள்ளனர்.