நியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், குடும்பத்தை விட்டு பிரிந்து ஆஸ்திரேலியா சென்றான். அங்கு தங்கச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. ஆண்டுகள் பல கடந்தன. இளைஞனாக வளர்ந்த அவன் சம்பாதித்த பணத்தில் தங்கக்கட்டிகள் வாங்கினான். அவற்றை இடுப்பில் கச்சை போல கட்டிக் கொண்டு தாய்நாட்டிற்கு கப்பலில் புறப்பட்டான். நடுக்கடலில் புயல் வீசியதால் கப்பல் உடைய ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர். ஆனால் இளைஞன் மனஉறுதியுடன் கடலில் நீந்த ஆரம்பித்தான் இளைஞன். அப்போது நீச்சல் தெரியாத ஒரு சிறுமி, உயிருக்குப் போராடுவதைக் கண்டான். இடுப்பில் இருந்த தங்கக்கட்டியின் எடை அதிகமாக இருந்ததால் எப்படி காப்பாற்றுவது என யோசித்தான். தங்கத்தை விட உயிருக்கு விலை அதிகம் எனத் தோன்றியது. தங்கக் கட்டிகளை கடலுக்குள் வீசி விட்டு சிறுமியை தோளில் சுமந்து கொண்டு கரை சேர்ந்தான். சிறுமியை கூர்ந்து பார்த்தான். ஆச்சரியம் காத்திருந்தது. இளைஞனின் உடன்பிறந்த தங்கையே அச்சிறுமி என்னும் உண்மை தெரிந்தது. தங்கத்தை வீசி விட்டு தங்கையை காப்பாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். அன்பே வாழ்வின் அடித்தளமாகவும், ஆணிவேராகவும் உள்ளது.