மணியங்குடியில் 18ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2020 11:08
சிவகங்கை: காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நில தானம் வழங்கிய 18ம் நுாற்றாண்டு கல்வெட்டு மணியங்குடி கண்மாயில் கண்டறியப்பட்டது. தொல்லியல் குழுமத்தை சேர்ந்த இலந்தக்கரை ரமேஷ், விக்னேஷ்வரன், காளையார்கோயில் சரவணமணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்த குழுவினர் தெரிவித்த தாவது: 17, 18ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் சேது நாட்டினை ஆட்சி செய்தவர் ரகுநாத கிழவன் சேதுபதி மன்னர். அவரின் இரு மகன்கள் ரணசிங்க சேதுபதி, பவானிசங்கர சேதுபதி ஆவர். இதில் ரணசிங்க சேதுபதி சேதுபதி நாட்டின் வடபகுதியான திருப்புத்துார் பகுதிக்கு ஆளுநராக இருந்தார். சேதுபதி மன்னருக்கும் மதுரை ராணி மங்கம்மாவுக்கும் இடையே நடந்த போரில் மன்னர் வீரமரணமடைந்தார். மன்னரின்வாரிசான ப வானிசங்கரசேதுபதி , சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மரக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் என்பதால் அரசுரிமை மறுக்கப்பட்டு கிழவன்சேதுபதியின் தங்கை மகனான முத்துவயிரவநாதசேதுபதி மன்னராக முடிசூடினார். பவானிசங்கர சேதுபதி தஞ்சை மராட்டிய படைகளுக்கு தலைமையேற்று வந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு 1725 ல் சுந்தேரஸ்வர ரகுநாதசேதுபதியை போரில் வென்று இழந்த ஆட்சியினை பிடித்தார்.
3 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த பவானிசங்கர சேதுபதி சுந்தரேஸ்வரரகுநாத சேதுபதியின் சகோதரர் விஜயரகுநாத சேதுபதியால் தோற்கடிக்கப்பட்டார். பவானி சங்கரசேதுபதி ஆட்சிக்காலத்தில் நயினார்கோவிலுக்கு அண்டக்குடி என்ற கிராமத்தை தானம் வழங்கிய கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டில் உருவாட்டி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு பிலவங்க வருடம் கார்த்திகை மாதம் 29ம் நாள் சிவராத்தி தினத்தில் பவானிசங்கர சேதுபதி நில தானம் வழங்கியதை கல்வெட்டு தெரிவிக்கிறது. நில தானத்திற்கு தீங்கிழைப்பவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது, என தெரிவித்தனர். பெரியநாயகியம்மன் கோயில் கல்வெட்டு கிடைத்திருப்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.