பதிவு செய்த நாள்
31
ஆக
2020
07:08
கேரள கோவில்களில் உள்ள, 1,000 கிலோ தங்கத்தை, டிபாசிட் செய்யலாமா அல்லது அடமானம் வைக்கலாமா என, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தேவசம் போர்டு தலைவர் என்.வாசு கூறியதாவது: கேரளாவில், 1,248 கோவில்களை தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. கொரோனாவால், ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டதால், வருவாய் பாதிக்கப்பட்டது. சபரிமலை கோவிலில், சீசனின் போது, 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சபரிமலை கோவிலுக்கு மட்டும், ஊழியர்கள் சம்பளத்திற்கென மாதம், 50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள, 1,200 கோவில்களில், பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் வழங்கிய, 1,௦௦௦ கிலோ தங்கத்தை, ரிசர்வ் வங்கியில் அடமானம் அல்லது டிபாசிட் செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதில் சுவாமிகளுக்கு சாத்தப்படும் நகைகள் இடம் பெறாது.
இதற்கு முன், 2017ல், திருப்பதி கோவில் நிர்வாகம், ஸ்டேட் வங்கியில், 2,780 கிலோ தங்கத்தையும்; சாய்பாபா கோவில் நிர்வாகம், 200 கிலோ தங்கத்தையும் டிபாசிட் செய்துள்ளன. எனவே, இது புதிய விஷயம் அல்ல. இதில் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி, 1,200 கோவில்களின் நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, தேவசம் போர்டு தலைவர் கூறினார்.
- நமது நிருபர் -