பதிவு செய்த நாள்
31
ஆக
2020
12:08
தமிழகத்தில் நடந்த அகழாய்வில், 4,000 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில், நான்கு இடங்களில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்கிறது.
கடந்த மாதம் வரை நடந்த அகழாய்வின் முன்னேற்ற அறிக்கையை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.அதன் வழியாக, 3,959 தொல்பொருட்களை கண்டறிந்து, தமிழக தொல்லியல் துறை அசத்தியுள்ளது, தெரிய வந்துள்ளது. இந்த அகழாய்வுகள், அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. அதற்குள், இன்னும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:தற்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள மணலுார், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில், அகழாய்வு நடக்கிறது. அதேபோல், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார் மற்றும் சிவகளை; ஈரோடு மாவட்டம், கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடக்கின்றன. இவற்றில் மொத்தம், 76 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு, 3,959 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.மேலும், 389 கரிமப் பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. கொந்தகை, ஆதிச்சநல்லுார், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில், மொத்தம், 103 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன.கீழடிகீழடியில் க, ய எனும் தமிழ் பிராமி எழுத்துகளுடன், சிவப்பு நிற மண்பாண்ட ஓடு கிடைத்துள்ளது. இது, சங்க கால தமிழரின் கல்வியறிவை வெளிப்படுத்துகிறது. அத்துடன், கார்னேலியன், அகேட், அமெதிஸ்ட் உள்ளிட்ட விலையுயர்ந்த மணிகள் கிடைத்துள்ளன. இவை, பிற நாட்டுடன், பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு சான்றாகின்றன. மையப் பகுதியில், ஆமை வடிவத்துடன் சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. 300, 150, 18, 2, 1 கிராம் எடையுடைய, கோள வடிவ எடைக்கற்கள் கிடைத்துள்ளன. இவை, வணிகத்தின் துல்லியத்தை உணர்த்துகின்றன. கடந்த அகழாய்வில் வெளிப்பட்ட சுட்ட செங்கல் கட்டடத்தின் தொடர்ச்சியும், அதை சார்ந்த பொருட்களும் கிடைத்துள்ளன. 800 செ.மீ., நீளமுள்ள மாட்டினத்தின் முழுமையான முதுகெலும்பும் கிடைத்துள்ளது.கொந்தகைபெரிய முதுமக்கள் தாழியில், பத்து சிறிய சிவப்பு நிற பானைகள், கருப்பு - சிவப்பு பானைகள் கிடைத்துள்ளன.முதுமக்கள் தாழியில், வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதேபோல், பல்வேறு அளவுகள் உள்ள, ஐந்து குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன.அகரம்இங்கு, 7,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய, கிழிக்கும் தன்மையுள்ள மெல்லிய கத்திகள் உள்ளிட்ட நுண்கற்கால கருவிகள் கிடைத்துள்ளன.
வெட்டு முகப்புடன் கூடிய, செர்ட் வகை மூலக்கூறும் கிடைத்துள்ளது.வழவழப்பான மழு எனும் கல்லாயுதம்; ஒருபுறம் சின்னம் மறுபுறம் ஒரு புள்ளி, ஒரு வளைந்த கோடு, எதிர்த்திசையில், 5 புள்ளிகளுடன், 2 சிறு கோடுகள் உள்ள தங்க நாணயம் கிடைத்துள்ளது.கரியாக மாறிய, 20 நெல்மணிகள் கிடைத்துள்ளன. இவை, கார்பன் பகுப்பாய்வுக்கு உதவும் சான்றாக உள்ளன. மேலும், கிண்ணம் போன்ற அடையாளத்துடன் பெரிய கற்கள் கிடைத்துள்ளன. செலடான் எனும், இளம்பச்சை நிற சீன மண்பாண்ட விளிம்புப் பகுதி கிடைத்துள்ளது. புகைப்பானின் கழுத்துப் பகுதிகள், கீறல் அடையாளத்துடன் கிடைத்துள்ளன.மணலுார்இங்கு, கட்டுமானச் சான்றுகளாக அடையாளங்களும், நாணயங்களும் கிடைத்துள்ளன.ஆதிச்சநல்லுார்இங்கும் நுண் கற்கால கற்கருவிகள்; சங்க கால தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இரும்பு கருவிகளின் சிதைந்த பாகங்கள், மேற்கூரை ஓடுகள், விதவிதமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.சிவகளைஇங்கு பலவித முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், கல் பந்து உள்ளிட்டவை கிடைத்துள்ளன.கொடுமணல்இங்கு ஆதன் எனும் பெயரில் உள்ள பானையோடு மற்றும், ள், அ, கு, ர ஆகிய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், வாய்க்கால் போன்ற கட்டடப் பகுதி, இரும்பு உலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
, உலைக்கு அருகில் குவியலாக பானைகள், குறியீடுள்ள பானையுடன் படிகத் தொழிற்கூடம், தலைவர்களை புதைக்கும் சிஸ்ட்டுடன் கூடிய கல் வட்டம் கிடைத்துள்ளன. விலையுயர்ந்த அகேட், கார்னிலியன் உள்ளிட்ட மணிகள் கிடைத்துள்ளன.இந்த தொல்பொருட்கள், பழந்தமிழக மக்களின் வாழ்க்கை முறை, அறிவியல் தொழில்நுட்பத்தை விளக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதிக்கும்படி, மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவுக்கு, தமிழக தொல்லியல் துறை கடிதம் எழுதி உள்ளது.