பதிவு செய்த நாள்
17
செப்
2020
10:09
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பரிவார கோபுர விமானங்கள், கொடி மரங்களுக்கு சிறப்பு பாலாலய நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் ஐந்து தேர், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம், பஞ்சமூர்த்திகள் என ஐந்தின் சிறப்புகளை கொண்டது.இங்கு கடந்த 2002ம் ஆண்டில், கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கடந்தாண்டு திருப்பணி துவங்கி, கோபுரங்கள், சுற்றுச்சுவர், பிரகாரம், சுவாமி சன்னதிகள் புனரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இந்நிலையில், பரிவார கோபுர விமானங்கள், பிரதான கொடிமரம் மற்றும் ஈஷான தத்புருஷ கொடி மரங்களுக்கு பாலாலயம் நடந்தது. பெரியநாயகர் சுவாமி சன்னதியில் பரிவார கோபுர விமானங்கள், கொடிமரங்களுக்கு அத்திப்பலகைகளில் ஆவாகணம் செய்து, விக்னேஷ்வர பூஜையுடன் யாகபூஜை நடந்தது.புனிதநீர் கலசங்கள் வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்விபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து உள்பிரகார வலம் வந்ததும், சிறப்பு ஆராதனையுடன் பாலாலயம் செய்யப்பட்டது.கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, கும்பாபிேஷக திருப்பணி கமிட்டி தலைவர் அகர்சந்த், அலுவலர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.