ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்றம் சார்பில் நீதிமன்றம் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் இவ்விழா ஆக.22 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்ய தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே ஹிந்து அறநிலையத்துறை செப்.13ல் சிலைகளை விஜர்சனம் செய்ய தன்னிச்சையாக முடிவெடுத்தது. கரி நாளான அன்று விழா நடத்த மன்ற தலைவர் ராம்ராஜ் தடை உத்தரவை பெற்றார். இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மாலை சிவகன கைலாய வாத்தியக்குழுவினர் முன் செலலபிரதான கணபதியுடன் நான்கு வெவ்வேறு விநாயகர் ரதங்கள் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்டு, சங்கரன் கோயில் முக்கு வழியாக ஊர்வலமாக புதியாதி குளம் கண்மாய் வந்தடைந்தது.அங்கு சிலைகளை கரைத்தனர். இதை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டி மூன்று நாளாக தன்வந்திரி யாகம் மற்றும் பொது மக்கள் இருப்பிடத்திற்கே வாகனங்களில் சென்று தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராம்ராஜ் செய்திருந்தார்.