ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2020 05:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜையில் கலந்து கொள்ள தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. உயர்நீதிமன்றத்தில் இறுதி அனுமதி கிடைக்கும்பட்சத்தில் ஆன்லைன் முன்பதிவு வரும் செவ்வாய் முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலால் மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அடுத்த மாதம் மண்டல- மகரவிளக்கு சீசன் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. சுகாதாரத்துறையின் கடும் எதிர்ப்பால் இந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐப்பசி மாத பூஜையில் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.நேற்று காலைதிருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்யும் பக்தர், பதிவு செய்யும் தினத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்த விஷயத்தில் கேரள உயர்நீதிமன்றத்தின் சபரிமலை பெஞ்ச், தேவசம் ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளது. திங்கட்கிழமை இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அன்று இரவு அல்லது செவ்வாய் காலை முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.