பதிவு செய்த நாள்
13
அக்
2020
11:10
திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை மீது ஏறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது. திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்றும் அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம் கொண்டது. அன்று மட்டும், 2,500 பேர், மலை ஏற அனுமதிக்கப்படுவர். விழா முடிந்ததும், மலை மீது ஏற தடை விதிக்கப்படும். இருப்பினும் சிலர் தடையை மீறி, மலை மீது ஏறி, இறங்க வழி தெரியாமல் தவிப்பதும், அவர்களை தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்கும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன், மலை ஏறும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தினர், 15க்கும் மேற்பட்டோரை, அனுமதி பெறாமல், மலை மீது அழைத்து சென்றனர். இதில் ஒருவர் மாரடைப்பால் பலியானார். இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மலையில், அனுமதியின்றி ஏறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடும் நடவடிக்கை பாயும் என்றும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.