பதிவு செய்த நாள்
20
அக்
2020
05:10
திருச்சி :ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வைணவத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கான முகூர்த்தகால் நடும் வைபவம், நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. ரெங்கநாதர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகில், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் முன்னிலையில், சிறப்பு பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, டிசம்பர், 14ம் தேதி, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. பகல்பத்து, ராப்பத்து என, 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, டிசம்பர், 25ம் தேதி அதிகாலை காலை, 4:45 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.