பதிவு செய்த நாள்
26
அக்
2020
09:10
நவராத்திரி கோலாகலமாக முடிந்தது. இது, தினமலர் நாளிதழுடன் சேர்ந்து கொண்டாடியதாக, பல வாசகர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். தினம் ஒரு அம்பிகை வரலாறு, பூஜை முறைகள், சுலோகம், நைவேத்ய செய்முறை என, கல்யாண கோலாகலமாக இருந்தது.மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு, விஷயம் அறிந்து கொலு வைத்ததும், பூஜைகளைசெய்ததும், உண்மையாகவே வாசகர்களின் மனதைமகிழ வைத்திருக்கும் என, நம்புகிறோம்.
விஜயதசமி: நவராத்திரி முடிந்த மறுநாளுக்கு, விஜயதசமி என்று பெயர். பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது நவராத்திரி. எவ்வளவோ இன்னல்கள், துன்பங்களுக்கு இடையில் தான், மனித வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. துன்பங்களை இன்பமாக்கவும், தோல்விகளை வெற்றி யாக்கவும், ஒன்பது நாட்கள் வழிபாடு நடத்திய நமக்கு, அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இன்று அருள்பாலிக்கப் போகிற நாள் என்பதாலேயே, இன்றைய தினம் விஜயதசமியாகப்போற்றப்படுகிறது. விஜய என்றால் வெற்றியை நோக்கிய பயணம்என்றும், வெற்றி என்றும் கூட கூறலாம். இன்று, புத்துணர்ச்சியுடன் நாம் துவங்கும் வாழ்க்கைப் பயணம், வெற்றிகரமானதாகவேஅமையும். தொட்டது துலங்கும் என்பரே, அது இனி நமக்கு தான்.
வித்யாரம்பம்: முதல் நாள், சரஸ்வதி பூஜையில் வைத்த புத்தகங்களை புனர் பூஜை செய்து, அவற்றை எடுத்து, பெரியவர்கள் கையில் கொடுத்து, அவர்களுக்கு நமஸ்காரம் செய்து, ஆசியுடன் அவற்றைப் பெற்றுப் படிக்கத் துவங்குதலுக்கு, வித்யாரம்பம் என்று பெயர். இப்படிச் செய்தால், எல்லா வகையான படிப்புகளிலும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுதல் உறுதி. இதேபோல, முதன்முதலாகப் பள்ளியில் சேர்க்கப் போகும் குழந்தைகளுக்கு, அக் ஷராப்யாசம் செய்து வைக்க வேண்டும். சரஸ்வதி, ஹயக்ரீவர், தக்ஷிணாமூர்த்தி ஆகியோரை வழிபட்டு, தாம்பாளத்தில் நெல் பரப்பி, குழந்தையின் கையைப் பிடித்து, அ, ஆ... எழுதச் சொல்லிக் கொடுப்பதும்வித்யாரம்பம் ஆகும்.
ஜயமளிக்கும் விஜயலட்சுமி: அஷ்ட லட்சுமிகளில் ஒருவளாகிய விஜயலட்சுமி, திருவாரூர் கமலாம்பிகையை நவராத்திரியில் வழிபட்டு, தம்மை வழிபடுபவர்களுக்கு வாழ்நாள் வெற்றியை அளிக்கும் வரத்தைப் பெற்ற நாள், விஜயதசமி!
வித்யா பூஜை: முதல் நாள் பூஜித்த புத்தகங்கள்,ஆயுதங்கள், இவற்றின் முன்தாம்பாளத்தில் எட்டு இதழ் தாமரைக்கோலம் போட்டு, இதழ்களில் மேலிருந்து வலமாக, ஓம், ஐம், ஹ்ரீம், க்லீம், ஸ்ரீம், தும், வம், ஸௌம் என்றஎட்டு பீஜாட்சரங்களை எழுதவும்.தட்டத்தைச் சுற்றி எட்டு தீபங்கள் ஏற்றவும். புஷ்பங்களினால் கோலத்தின் நடுவில், ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ! ஓம் ஹயக்ரீவாய நமஹ! ஓம் தட்சிணாமூர்த்தயே நமஹ! என்று அர்ச்சனை செய்யவும். மணியடித்து, துாப தீபம் காட்டவும்.
கற்பூர ஆரத்தி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபினீ|
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா||
ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்|
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே||
குருர்ப்ரம்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர
குருஸ்ஸாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம...
என்ற சுலோகங்களையும், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லிமாலை ஆகியவற்றில் தெரிந்த பாடல்களையும் பாடவும். பெண்களுக்கு சுமங்கலிக்கு சிகப்பு ரவிக்கைத் துணியுடன், மங்களப்பொருட்கள் வைத்து கொடுக்கவும்.
ஆரத்தி; நிறைவாக, தாம்பாளத்தில் ஆரத்தி கரைத்து, சூடம் ஏற்றி வைத்து, கொலு மற்றும் பூஜையில் உள்ள எல்லாவற்றிற்கும் மூன்று முறை சுற்றி ஆரத்தியெடுத்து, மங்களகரமாக நவராத்திரியை நிறைவு செய்யவும்.
நிவேதனம்: பாசிப்பருப்பு பாயசம், தயிர்சாதம் நிவேதனம் செய்யவும்.