திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவலால், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஹிந்து முன்னணியினர் 2 நாட்கள் கோவிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விழாவை உள்பிரகாரத்திற்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலையில், காந்திமதியம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. நவ.,10 பகல் 12:00 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்தருளல் விழாவும், மறுநாள் அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண திருவிழாவும் நடக்கிறது. நவ.,11 முதல் 13 வரை ஊஞ்சல் விழாவும், நவ.,14 இரவு சுவாமி அம்பாள் இருவரும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டண பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது.