காரியாபட்டி: மூதாதையர்கள் விட்டு சென்ற வரலாற்று சுவடுகள் எச்சங்களாக பல்வேறு இடங்களில் இருந்தாலும் கூட அதில் உள்ள வரலாற்று சுவடுகளுக்கு பின் வியக்கத்தக்க ஆச்சரியமான பல அதிசயங்களும் அடங்கி உள்ளன.
அந்தவகையில் காரியாபட்டி கட்டுக்குத்தகை கரிசல்குளம் ஒரு காலத்தில் பூதப்பாண்டிய கரிசல்குளம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு 30 அடி உயரத்தில் கல் மடை ஒன்று உள்ளது. இதை அப்பகுதி மக்கள் கல் மடை கருப்பசாமி என காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இதற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. இந்த சம்பவம் குறித்த தகவல் அங்கு கர்ணமாக பணியாற்றிய சொக்கலிங்க முதலியாருக்கு மட்டுமே தெரியும்.
அவர் கூறியதாவது: 700 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களின் கடைசி மன்னனான பூதபாண்டிய மன்னன் கரிசல்குளம் பகுதியில் மிக பெரிய நீர்நிலை ஏற்படுத்தி திருச்சுழி வரை வயல் வெளிகளாக உருவாக்க நினைத்தார். இப்பணிகளை விரைவாக முடிக்க எண்ணி பூதங்களின் உதவியால் 5 கிலோமீட்டர் துாரத்திற்கு மிக உயரமான கரை ஏற்படுத்தி மூன்று இடங்களில் மடை ஏற்படுத்தினார்.60 அடிக்கு ஒரே கல்லில் துாண் போன்ற கல் மடை ஏற்படுத்தப்பட்டு 30 அடி ஆழத்தில் பதிக்க , கல் மடை மேல்புறம் 30 அடிக்கு கடல்போல் தண்ணீர் நிரம்ப செய்தார்.
அப்போது வயல்வெளிகளை உருவாக்கும் பணிகளும் நடைபெற்றது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு இடத்தில் இப்பணி நடைபெறும் போது ஒரு பெண் ஒருவர் பணிகளை செய்ய விடாமல் தடுத்தார். இத் தகவலை மன்னருக்கு தெரியவர யார் தடுத்தாலும் அவரது தலை துண்டிக்க மன்னர் உத்தரவிட்டார். அதன்படி அப் பெண் தலை வெட்டப்படுகிறது. மறுநாள் அதே இடத்தில் பணிகளை துவக்கிய போது வெட்டப்பட்ட அதே பெண் மீண்டும் பணிகளை தடுக்கிறார். வீரர்கள் மிரண்டு போய் வெட்டப்பட்ட பெண் எப்படி மறுபடி உயிரோடு வந்தார் என்பது தெரியாமல் மன்னரிடம் தெரிவித்தனர். எதையும் யோசிக்காமல் அவள் தலையை துண்டித்து பணிகளை துவக்குங்கள் என கட்டளை இட்டார். இரண்டாவது முறையாக வெட்டப்பட்டு மூன்றாவது நாள் பணிகளை துவக்கும்போது அதே பெண் மறுபடியும் காட்சியளித்து பணிகளை தடுக்கிறார்.
வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் வருகிறாள் என கோபத்தில் மூன்றாவது முறையாக விட்டுவிடுகின்றனர். இருந்தாலும் இந்த தகவலை மன்னர் இடத்தில் தெரிவிக்கின்றனர். சுதாரித்த மன்னர் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது அரியநாச்சி அம்மன் காட்சியளித்தார். இதை கண்ட மன்னர் அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என எண்ணி அப்பணிகளை அப்படியே விட்டு விட்டார். தற்போது இப்பகுதியில் உள்ள அரியநாச்சி அம்மன் வெட்டப்பட்ட தலைகளுடன் காட்சியளிக்கிறார். பூதப்பாண்டிய கரிசல்குளமானது பின்னாளில் கட்டு குத்தகை கரிசல்குளம் ஆக மாறியது.
காரணம் கடைசியாக ஆண்ட பாளையக்காரர்களில் ஒருவர் தனது நெருங்கிய நண்பருக்கு இப்பகுதியில் உள்ள நிலங்களை ரூ.785க்கு குத்தகைக்கு விட்டார். இவரால் நிலங்களை கவனிக்க முடியாமல் இங்குள்ள முதலாளி ஒருவருக்கு உள்குத்தகைக்கு விட்டார். அதன் பின்னரே இந்த ஊருக்கு கட்டுக்குத்தகை கரிசல்குளம் என பெயர் வந்தது. மனிதனால் சாத்தியப்படாத கல் மடையையும், வெட்டப்பட்ட தலையையும் இன்றும் பலரும் வணங்கி செல்கிறார்கள். ஆனால் இதன் பின் உள்ள உண்மை சம்பவம் யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை,என்றார்.